செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2016 ஆகஸ்ட் 10ம் தேதி திருப்பதி அடுத்த கரகம்பாடி பகுதியில் இருந்து செம்மரம் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திருவண்ணாமலையை சேர்ந்த பொண்ணு சுவாமி மற்றும் திருமலை, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்து 916 கிலோ எடை கொண்ட 58 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு, செம்மர கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து திருப்பதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளில் தற்போது அளிக்கப்பட்டுள்ள 11 ஆண்டுகள் சிறை தண்டனை அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.