ஐபிஎல் 35-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை நூலிழையில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச தீர்மானித்தது. பெங்களூரு அணியில் பார்த்தீவ் படேல், விராட் கோலி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பார்த்தீவ் பட்டேல் அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய, அட்சதீப் நாத் 13 ரன்களுக்கு அவுட் ஆக மொயின் அலி கோலி ஜோடி நிலைத்து நின்று ஆடியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதேபோல் மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோலி 58 பந்துகளில் 100 ரன்களை எடுத்து தன்னுடைய 5-வது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
வெற்றி பெற 214 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் கிரீஸ் லின்1 ரன்னிலும், சுனில் நரைன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராபின் உத்தப்பாவும், ஷுப்மன் கில்லும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க அந்த அணி 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணாவும், ஆண்ட்ரு ரசலும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் கடைசி 6 ஓவருக்கு 113 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரசல்லும், ராணவும் மைதானத்தின் நாலாபுறமும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். இந்த பாட்னர்ஷிப்பை களைக்க முடியாமல் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
19-வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அணியின் ஸ்கோர் 190 ரன்கள் ஆனது. கடைசி ஓவருக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
Discussion about this post