விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016 நவம்பர் மாதத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்ட போதிலும், மக்கள் கடுமையான சிரமத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளானார்கள்.
இதையடுத்து புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய 200, 100, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியது.
மாறுபட்ட வடிவங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்பொழுது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.