இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களிடையே மோதல் ஏற்பட்டது. சபாநாயகர் கரு. ஜெயசூர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும் நாடாளுமன்றத்தையும் அவர் கலைத்தார். இந்த உத்தரவிற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், நேற்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்பொழுது ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியபொழுது, ஆவேசமாக பேசிய ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றைய தினம் கருப்பு தினம் என்று தெரிவித்தார். மேலும் அதிபராக இருந்த தனக்கு பிரதமர் பதவி பெரிதல்ல என்றும் அவர் கூறினார்.
ராஜபக்சேவின் இந்த உரைக்கு ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
Discussion about this post