திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னனித் தலைவர் இராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் ட்விட்டர் பதிவில், பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவால் இந்திய இசையுலகம், இனிமையான சாரீரத்தை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி.யின் எண்ணிலடங்கா ரசிகர்கள், அவரை பாடும் நிலா என அன்புடன் அழைப்பதையும் குறிப்பிட்டுள்ளார். பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ள அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது என்றும் குடியரசுத்தலைவர் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவால், நமது பண்பாட்டு உலகம் பேரிழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மென்மையான குரலாலும், இசையாலும் பல பத்தாண்டுகள் ரசிகர்களை கவர்ந்தது இழுத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். இந்தத் தருணத்தில், எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது பாடல்கள் பல மொழிகளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்திருக்கும் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணி மறைந்தாலும் அவரது இனிமையான சாரீரம் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்றும் இராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.
Discussion about this post