மாநிலங்களவை தேர்தலில் மனுத்தாக்கல் செய்துள்ள வைகோவின் வேட்புமனு, நிராகரிக்கப்படும் என்று கருதி திமுக மாற்று வேட்பாளரை களமிறக்கியுள்ளது.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் திமுகவில் 2 பேரும் மதிமுக சார்பில் வைகோவும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் தேச துரோக வழக்கில் வைகோவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
இதனிடையே வைகோவின் மனு நிராகரிக்கப்படலாம் என திமுக முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் வைகோவிற்கு மாற்று வேட்பாளராக என்.ஆர் இளங்கோவை திமுக அறிவித்துள்ளது. அவரும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வைகோவிற்கு பதில் மதிமுகவில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.