மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மக்களவை தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்றத்தின் பெயர், கொடி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், மேடையில் பேசிய போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து போர் வரும் தயாராக இருங்கள் என்றும் அவர் பேசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே ஓராண்டு முடிந்தும் இன்னும் கட்சியை ஆரம்பிக்காமல் இருக்கிறார் என பல்வேறு தரப்பினர், ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து வந்துள்ள இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post