இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்நாட்டில் தொடர்ந்து ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் வட மாகாணங்களில் ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. சிலாபம், குளியாபிட்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் வன்முறை காரணமாக அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம் என்றும் இலங்கையின் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை தவறவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்றும், இனங்களுக்கு எதிராக அணிதிரள வேண்டாம் என்றும் நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து தரப்பினரும் அமைதியாக செயல்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.