இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

இலங்கையில் பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி பேரணி நடத்திய வேலையில்லா பட்டதாரிகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் வழங்குவதில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டுவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும், இலங்கையில் ஆங்காங்கே பட்டதாரிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.

தலைநகர் கொழும்புவில் மத்திய ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய வேலையில்லா பட்டதாரிகள், அங்கிருந்து அதிபர் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அதிபர் செயலகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பட்டதாரிகள் தொடர்ந்து முன்னேற முயன்றதால், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

கண்ணீர் புகை குண்டு வீச்சால் அந்த இடமே போர்களம்போல் காட்சி அளித்தது. கலவர தடுப்பு பிரிவினரின் தாக்குதலில் பேரணியில் பங்கேற்ற பெண்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிவியது.

Exit mobile version