வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் மற்றும் கோவை மாவட்டம் சின்ன கல்லாறில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேலும், தென்மேற்கு திசையில் இருந்து 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசுவதால் மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post