மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்ட போதிலும் தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கோட்டித் தீர்த்ததால், சாலைகளின் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இந்த கோடை மழையினால், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் பலத்த காற்றுடன் அரை மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெப்ப சலனம் காரணமாக வன்னியம்பட்டி, கிருஷ்னன்கோவில், மல்லி ஆகிய பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Discussion about this post