தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், நகர் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், தாம்பரம், திருநீர்மலை, செம்பாக்கம், மடிப்பாக்கம், சோளிங்கநல்லூர், பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், நசரத்பேட்டை, போரூர், திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழை காரணமாக மாலை நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளான உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. குத்தாலம், மங்கநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக ஓமலூர் அரசு பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
Discussion about this post