ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பாணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். இந்த திட்டம் நிதி ஒழுங்குமுறையை சிதறடிப்பதுடன், பணி மனப்பான்மைக்கு எதிராகவும் அமைந்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் மற்றும் பட்ஜெட்டில் 13 சதவிகிதம் செலவு ஏற்படும் என்றும் இந்த திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 2013ல் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அதை செயல்படுத்தாத நிலைதான் இந்த திட்டத்திற்கும் இருக்கும் என்று ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post