வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டரில் பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிராக்டர் பேரணி மேற்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து ராகுல் டிராக்டரில் பேரணி சென்றார்.
மூன்றாவது நாளில் பஞ்சாப் மாநிலம் நுர்பூரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், உணவுப் பாதுகாப்புத்துறையை நரேந்திர மோடி அரசு சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, நுர்பூரில் இருந்து தொடங்கிய பேரணியில் டிராக்டரை ராகுல் காந்தி ஓட்டிச் சென்ற நிலையில், ஹரியானா எல்லையான பாட்டியாலா என்ற இடத்தில் ராகுல் காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து பஞ்சாப்-ஹரியானா எல்லையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ஒரு மணிநேரம் அல்ல, 5 மணிநேரம் ஆனாலும் ஹரியானாவுக்குள் செல்லாமல் நகருவதில்லை என்று கூறினார். இருமாநில எல்லையில் அரைமணிநேரமாக காங்கிரஸ் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியை, ஹரியானாவுக்குள் டிராக்டர் பேரணி மேற்கொள்ள அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து ஹரியானா மாநிலத்தில் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியை மேற்கொண்டார்.
Discussion about this post