இந்திய விமானப்படையிடம் முதல் ரஃபேல் விமானம் இன்று ஒப்படைக்கப்பட்டுஉள்ளது. ரஃபேல் விமானங்களின் திறன் என்ன? அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது. பிரான்சின் ஃபோர்டோ நகரில் நடைபெற்ற விழாவில் முதல் ரஃபேல் போர் விமானத்தை ராஜ்நாத்சிங் பெற்றுக் கொண்டார். ஆனால் இந்த விமானம் வரும் மார்ச்சில்தான் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
இந்தியாவில் ரஃபேல் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன. விமானிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 போர் விமானங்களில் 4 விமானங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா வந்து சேரும். மார்ச்சில் ரஃபேல் விமானங்கள் இந்திய வான் பரப்பில் தங்கள் பணிகளைத் தொடங்கும்.
ரஃபேல் விமானத்தில் முக்கிய அம்சங்களைப் பார்க்கப் போனால், ஒரு ரஃபேல் விமானத்தின் எடை 10 ஆயிரம் கிலோ ஆகும். அதில் ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை நிரப்பினால் அதன் எடை 24 ஆயிரத்து 500 கிலோ ஆகும்.
ரஃபேல் விமானங்கள் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் 3700 கிலோமீட்டர்களுக்குத் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை.
ரஃபேல் விமானங்கள் 5.3 மீட்டர் உயரமும், 15 புள்ளி 3 மீட்டர் நீளமும் கொண்டவை. இவற்றின் இறக்கையின் நீளம் 10.8 மீட்டர் ஆகும்.
ரஃபேல் விமானங்களில் இரட்டை எஞ்சின்கள் உள்ளதால், அனைத்து ஆயுதங்களையும் சுமந்து கொண்டு மணிக்கு 1,389 கிலோ மீட்டர் வேகத்தில் இதனால் பறக்க முடியும்.
ரஃபேல் விமானத்தில் மீட்டேர், ஸ்கால்ப் ஆகிய ஏவுகணைகள் உள்ளன. மீட்டேர் ஏவுகணை, விமானத்தில் இருந்து பாய்ந்து சென்று வானத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். இதைக் கொண்டு எதிரிகளின் விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே அழிக்க முடியும். இது எல்லா வானிலையையும் சமாளித்து செயல்படும். அதிநவீன ரேடார் இதை வழிநடத்தும்
‘ஸ்கால்ப்’ ஏவுகணை பூமியில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடியது.திட்டமிடப்பட்ட துல்லியத் தாக்குதல்களுக்கு இதனைப் பயன்படுத்தலாம். இவை தவிர 30 மி.மீட்டரே உடைய குட்டி பீரங்கியையும் இன்னும் பல நவீன ஆயுதங்களையும் ரஃபேல் விமானங்கள் தாங்கிள்ளன.
Discussion about this post