உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை வீழ்த்தி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னதாக நடந்த அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து தரவரிசையில் 3 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூ ஃபெய்யை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி சிந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து, ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். ஏற்கனவே உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ள சிந்து, முதல் முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
தங்கம் வென்ற பி.வி. சிந்து, தான் பெற்ற இந்த வெற்றியை, இன்று பிறந்தநாள் காணும் தன்னுடைய தாய்க்கு அர்ப்பணிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post