பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் வைப்புத் தொகையை எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்ததைக் கண்டித்து அதன் வாடிக்கையாளர்கள் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், கோவா, குஜராத், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்ட முன்னணி கூட்டுறவு வங்கியான பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கியில் வைப்புத் தொகை செலுத்துவது, பணத்தை எடுப்பது, புதிய கடன் வழங்குவது ஆகிய நடவடிக்கைகளை ஆறு மாதத்துக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில் வங்கியில் செலுத்திய பணத்தை எடுக்க முடியாத மன அழுத்தத்தில் மும்பையில் வாடிக்கையாளர்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் 40 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் எனக் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி சற்றுத் தளர்த்தியுள்ளது. இருப்பினும் உழைத்துச் சேமித்த பணத்தை முழுவதும் எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும் என்றும், ஊழலில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post