ஜனவரி 14, 1974 இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து ,இணைத்து உருவாக்கப்பட்டது தான் இப்போதைய புதுக்கோட்டை மாவட்டம்.
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதா்கள் வாழ்ந்த இடமாக இந்த மாவட்டம் இருந்துள்ளது. இம்மாவட்டத்தின் பல கிராமங்கள் தொன்மை வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்ட இறந்தோரை புதைக்கும் இடங்களே இதற்குச் சான்று.
இம்மாவட்டம் தமிழா்களின் கடல் வாணிபச் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. கருக்காகுறிச்சியில் கிடைத்த 500-க்கும் மேற்பட்ட ரோமானிய தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் பானை இம்மாவட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சமஸ்தானங்களை இணைக்கும் நிர்வாக வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் 03.03.1948-ல் இந்திய நிர்வாகத்துடன் இணைந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமானது.
புதுக்கோட்டையில் நிலவிய தொண்டைமான் மன்னா்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்களாட்சி ஏற்பட்டது. நவீன புதுக்கோட்டையின் சிற்பிகள் தொண்டைமான் மன்னா்கள் எனலாம். புதுக்கோட்டை வரலாறு தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. பல சிறப்பு அம்சங்கள் கொண்ட புதுக்கோட்டை மாவாட்டம் உருவாக்கப்பட்ட தினம் இன்று.
Discussion about this post