காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தெரிவிக்கையில், “கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர்வளத் ஆணையத்திடம் சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணை கட்ட அனுமதி வழங்கியது என்று தெரிவித்தார்.
இதனால், தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்பதை அறிந்து மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், அணை கட்டுவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.
சிங்கபூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் 7 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் பா.ஜ.க. அரசு ஜிஎஸ்டி வரி முறையை அமலுக்கு கொண்டு வந்து தற்போது, 31 பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர். ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வியே ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதற்கு காரணம் என குறிப்பிட்டார்.
மூன்றாவது அணியை உருவாக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.