நெல்லை மாவட்டம் தென்காசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தென்காசியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ள நிலையில், இங்குள்ள மக்களின் ஒரு நாளைய குடிநீர் தேவை 67 லட்சம் லிட்டராக உள்ளது. தாமிரபரணி குடிநீர் திட்டம் மற்றும் குற்றாலம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்ததால் குற்றாலத்தில் குடிநீர் வரத்து குறைந்த நிலையில், இதை ஈடுசெய்யும் வகையில் நகராட்சி கிணறு ஆழம் செய்யப்பட்டு அதன்மூலம் தண்ணீர் தேவை ஈடுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாமிரபரணி குடிநீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்த தென்காசி நகராட்சி ஆணையர் பிரேமானந்த், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி குடிநீர் தடையின்றி கிடைப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் எனவும் சில இடங்களுக்கு நகராட்சி வாகனம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார். குடிநீர் தடையின்றி கிடைக்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.