குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும் என, ஆளுநர் மீண்டும் கெடு விதித்துள்ள நிலையில், சபாநாயகரே முடிவெடுத்து தனது அரசை காப்பாற்ற வேண்டுமென குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் ஆளும் கட்சி எதிர்கட்சிக்கிடையே அமளி ஏற்பட்டதால், அதனை காரணம் காட்டி, சபாநாயகர் பேரவையை இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே தங்கினர்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குமாரசாமிக்கு மாநில ஆளுநர் அவசர கடிதம் எழுதினார். ஆனால், தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்ததால், அந்த நேரமும் கடந்தது. இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குள், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் குமாரசாமிக்கு, ஆளுநர் மீண்டும் கெடு விதித்துள்ளார். இதனிடையே, சபாநாயகரே முடிவெடுத்து, தனது அரசை காப்பாற்ற வேண்டும் என குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post