கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்த இருந்த முழு அடைப்பு போராட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து வரி உயர்வை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.