வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை, ஜனவரி 4ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில், 40 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய வர்த்தக தொழில் இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, இரவு 7.30 மணிவரை நீடித்தது. அப்போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் முன்வைத்த நான்கு கோரிக்கைகளில், வேளாண் கழிவு எரிக்கும் விவசாயிகளுக்கான அபராதம் ரத்து, மின்சார திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்வது ஆகிய இரண்டிற்கும், கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என ஆரம்பம் முதலே மத்திய அரசு பேசி வருவதாகக் கூறிய அவர், அந்த விலை நிர்ணய கொள்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து தேவை என விவசாயிகள் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். அதனால், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக ஆராய, குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டார். மேலும், ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, டெல்லி விஞ்ஞான் பவனில், விவசாயிகள் கொண்டு வந்த மதிய உணவை, அவர்களுடன் சேர்ந்து, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் சாப்பிட்டனர்.
Discussion about this post