கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை ஆணையம் ஏற்கெனவே விதித்துள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக மேலும் சில கட்டுப்பாடுகளை வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுளளதாகவும் கூறியுள்ளார். அதன் விவரம்:
- ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிதான் பொறுப்பு. அவருக்கு தேவையான உதவியை சுகாதார அதிகாரி வழங்க வேண்டும்.
- கொரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சம்பந்தப்பட்ட நபர்கள் சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற வேண்டும்.
- எந்தவொரு வேட்பாளரோ, முகவரோ ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது ஆர்ஏடி பரிசோதனை அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாமலோ வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரக்கூடாது. அவர்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்குள்ளாக கோவிட் நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கான பரிசோதனைகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரும் வாக்கு எண்ணும் முகவர்கள் யார் என்ற பட்டியல், தேர்தல் அலுவலரிடம் வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அளிக்கப்பட வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே பொதுமக்கள் திரள அனுமதியில்லை.
- வாக்கு எண்ணிக்கை நடக்கும் அரங்கில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், சரியான காற்றோட்ட வசதி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பின்பும் அந்த மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதிப்படுத்தும் சரிபார்ப்புச்சீட்டை காண்பக்கும் இயந்திரத்தின் வெளிப்பகுதியை கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்பு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குப்பதிவுக்காக 3-4 அரங்குகளும் அதில் கூடுதல் தேர்தல் உதவி அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும்.
- அரங்கிற்குள் நுழையும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சானிடைசர், சோப்பு, தண்ணீர் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அரங்குக்குள் நுழையும் நபர்கள் ஒவ்வொருவரும் கை சுத்திகரிப்பான்கள் மூலம் சுத்தமாக கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி உள்பட பிற அறிகுறிகள் இருந்தாலும் அவர் வாக்கு எண்ணும் அரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்.
- ஒருவேளை தாம் முன்மொழிந்த முகவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், மாற்று முகவரை வேட்பாளர் நியமிக்கலாம்.
- வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் இடையே சமூக இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு பிபிஇ கவச உடை போதுமான அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரண்டு வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒரு ஏஜென்ட் பிபிஇ ஆடை அணிந்திருக்கும் வகையில் அந்த அறையில் இருக்கை அமர்வு வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முக கவசம், சானிடைசர், முகத்தை மறைக்கும் ஷீல்டு, கையுறைகள் போன்றவை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
- தபால் வாக்கு எண்ணிக்கை பணிக்காக கூடுதலாக தேர்தல் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனி அறையில் தபால் வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் கண்காணிக்கலாம்.
- அரசு வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்தப்பட்ட கோவிட் தொடர்புடைய கழிவுகளான முக கவசம், முகத்தை மறைக்கும் ஷீல்டு, பிபிஇ கிட்டுகள், கையுறைகள் போன்றவற்றை வீசுவதற்கு சரியான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- வாக்கு எண்ணும் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 2ஆம் தேதி எந்தவொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் அனுமதி கிடையாது. வெற்றி பெறும் வேட்பாளருடன் இரண்டு பேருக்கு மேல் வெற்றிச் சான்றிதழ் பெற வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவுகள் 51 முதல் 60வரையும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188 மற்றும் பிற சட்டப்பிரிவுகள் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் உள்ளூர் சூழல்களுக்கு தக்கபடி கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து மூன்றடுக்கு திட்டத்தை தேர்தல் அதிகாரிகள் தயாரித்து வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான விவரத்தை அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், முகவர்களின் கவனத்துக்கு உடனடியாக தேர்தல் அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post