பிளஸ்-1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மற்றும் கலந்து கொள்ள இயலாத மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க, மே 10 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், நேரடித் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இதுவரை சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் இன்று விண்ணப்பிக்கலாம் என்றும், ஒரு பாடத்துக்கு 50 ரூபாயும், இதர கட்டணம் 35 ஆகியவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் பதிவுக் கட்டணம் 50 ரூபாயுடன் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்வுக்கான அனுமதி சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post