தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப்பணியில் சேர்வதற்கு முன்னுரிமை

தமிழ் வழி பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்கும் திருத்த சட்ட முன்வடிவை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

இதில், 10ம் வகுப்பு கல்வித் தகுதியாக இருக்கும் அரசு பதவிக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழில் பயின்றிருக்க வேண்டும், இதேபோல் 12ம் வகுப்பு கல்வித்தகுதியாக இருக்கும் அரசு பதவிக்கான தேர்வில் பங்கேற்போர் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழிலேயே படித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக இருக்கும் அரசு பதவிக்கு 10, 12 மற்றும் பட்டயப்படிப்பை தமிழிலேயே படித்திருக்க வேண்டும் எனவும், பட்டமேற்படிப்பு கல்வித்தகுதியாக இருக்கும் அரசு பதவிக்கு, அனைத்து வகுப்புகளையும் தமிழில் படித்திருக்க வேண்டும் எனவும் சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தகுதி உள்ளவர்களே தமிழ் வழியில் கல்வி பயின்ற நபர் என கருதப்படுவார் எனவும் சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பணிகளில் சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க, புதிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பரங்கிவெட்டிக்காடு கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version