வங்கியில் பெற்ற கடன் மற்றும் வட்டி 450 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாததால், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஜவுளி மற்றும் நகைக்கடைகள் ஜப்தி செய்யப்பட்டன.
2017ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள இந்தியன் வங்கியில், தியாகராய நகர் ரங்கநாதன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் கோல்ட் ஹவுஸ் கடைகளை வைத்து சுமார் 240 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
வட்டியுடன் சேர்த்து 450 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்று வங்கியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், வங்கி அதிகாரிகள் எழும்பூர் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, முறைப்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியும் கடனை செலுத்தாததால், காவல்துறை உதவியுடன் நீதிமன்ற வழக்கறிஞர், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ரங்கநாதன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இரண்டு கடைகளும் ஜப்தி செய்து சீல் வைக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இந்த ஜப்தி நடவடிக்கையால் பாண்டிபஜார் மற்றும் வடக்கு உஸ்மான் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Discussion about this post