ஒடிசா மாநிலத்தை கடந்த 3ம் தேதி ஃபானி புயல் தாக்கியது. புயல் காரணமாக இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளன. மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளது. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள பிஜுபட் நாயக் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரவேற்றார். இதை தொடர்ந்து, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் மோடி பார்வையிட்டார். ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதலமைச்சர் நவீன் பட் நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதாப் ஆகியோர் உடன் இருந்தனர். வெள்ள சேதங்கள் குறித்து பிரதமரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
ஒடிஷா மக்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததால் பெரும் உயிரிழப்புகள் தவிற்க பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இது சாதாரண விஷயம் அல்ல.. பிரதமர் நிவாரண உதவியாக உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒடிஷா விரைவில் மீண்டுவர எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படும்.