பிரதமர் மோடி தனது ‘மன் கி பாத்‘ உரையில் பாரதியாரின் முப்பது கோடி முகமுடையாள் என்ற பாடலை குறிப்பிட்டு பேசியுள்ளது, இந்திய அளவில் தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
நேற்றைய ‘மன் கி பாத்‘ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உரையாற்றும் போது, தாய்மொழி அறிவு இல்லாமல் உயர்வு சாத்தியமில்லை என்பதால், இன்றிலிருந்தே, உங்கள் தாய்மொழி அல்லது வழக்கு மொழியையே பயன்படுத்தத் தொடங்குங்கள் என்றும் அவ்வாறு செய்வதன் மூலம், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் உத்வேகம் அளியுங்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மகாகவி சுப்ரமணிய பாரதியார், தமிழ் மொழியில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம், என்று கூறிவிட்டு, ‘‘முப்பது கோடி முகமுடையாள், உயிர், மொய்ம்புற ஒன்றுடையாள்–இவள், செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற், சிந்தனை ஒன்றுடையாள்‘‘ என்ற பாடலை எடுத்துரைத்தார். அந்த காலத்தில் எழுதப்பட்ட இந்த பாடலில், பாரத அன்னைக்கு 30 கோடி முகங்கள் உள்ளன என்றும், ஆனால் உடல் ஒன்றுதான் என்றும், அவளுக்கு 18 மொழிகள் இருக்கின்றன, ஆனால் எண்ணம் ஒன்றுதான் என்றும் எழுதி இருக்கிறார், என விளக்கம் அளித்தார். அவரது இந்த வரிகள் நம் அனைவருக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவையாக இருக்கின்றன என்று பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post