டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சந்தித்து கஜா புயல் பாதிப்புகளை விளக்கி, நிதியுதவி வழங்க வலியுறுத்துகிறார்.
கடந்த 16-ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை தஞ்சை, கடலூர், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளும் 88 ஆயிரம் ஏக்கர் பயிர்களும் சேதமடைந்ததாக தெரிகிறது.
10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் இருக்கலாம் என முதல் கட்ட மதிப்பீடு வெளியான நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக 1000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டார். ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியை சந்தித்து விளக்க மளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். பின்னர் நாளை காலை பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது கஜா புயல் சேத விவரங்களை பிரதமரிடம் விரிவாக எடுத்துக்கூறி இடைக்கால அறிக்கையையும் முதலமைச்சர் வழங்குகிறார்.
மத்திய அரசின் புயல் நிவாரண நிதியை விரைவாக வழங்க பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பவும் பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுகொள்ள இருப்பதாக தெரிகிறது.
Discussion about this post