மாமல்லபுரத்துக்குப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருவதை முன்னிட்டுச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா, சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வரும் 12 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவுள்ளனர். 2 நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி இரு தலைவர்களும் சென்னை விமான நிலையத்திற்கு பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் வரவுள்ளனர். விமான நிலையத்தில் இரு தலைவர்களுக்கும் இசை, நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் கிண்டியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் ஓய்வெடுக்கின்றனர். அன்று மாலை கார் மூலம் மாமல்லபுரம் செல்லும் இருவரும் அங்குள்ள ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவுள்ளனர். பின்னர் மீண்டும் கிண்டியில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கும் இரு தலைவர்களும் மறுநாள் மீண்டும் மாமல்லபுரதில் சந்தித்து இரு நாட்டின் நல்லுறவு குறித்துப் பேச்சு நடத்துகின்றனர். 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் சீன அதிபர் ஜின்பிங்கை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விமான நிலையம், கிண்டி, கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post