இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியா வருகிறார்.
இந்தியாவில் முதன் முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, அகமதாபாத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்கிறார்.
டிரம்ப்பின் வருகையையொட்டி அகமதாபாத் நகரம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து இருவரும் சாலை வழியாக சென்று மோட்டேராவிலுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைத்து, “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதில் 1 லட்சம் மக்கள் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இதனையடுத்து டிரம்ப் தனது குடும்பத்தினருடன் தாஜ் மஹாலை பார்வையிட ஆக்ரா செல்கிறார். பின்னர் டெல்லி திரும்பும் டிரம்ப்பிற்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு முறை வரவேற்பும், விருந்தும் அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாளை, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்து இருக்கிறார். ஆலோசனை முடிவில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிப்படுகிறது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பயணத்தின் இறுதியாக, நாளை இரவு டிரம்ப் அமெரிக்கா திரும்புகிறார்.
இதனிடையே, வாஷிங்டனிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு நேற்று மாலை புறப்பட்டார். இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 2 நாட்கள் இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்தார்.
லட்சக்கணக்கான மக்களுக்கு முன் உரை நிகழ்த்துவது மிக பெருமையாக கருதுவதாக கூறிய டிரம்ப், தன்னுடைய நண்பரான மோடியுடன் ஆலோசனை நடத்த இருப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய இந்திய பயணம் மிகப் பெரிய நிகழ்வாக அமையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பின்னர் வாஷிங்டனிலிருந்து இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புறப்பட்டார்.
Discussion about this post