இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
இலங்கையில் போட்டி கட்சிகளாக இருந்த சிறிசேனவின் சுதந்திர கட்சியுடன் இணைந்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தது. அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணிலும் பதவி வகித்து வந்தனர். இந்த கூட்டணி அரசாங்கத்தில் இரு தரப்பினரிடையே முரண்பாடுகள் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த மாதம் இறுதியில் ரணில் விக்ரமசிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக்கினார் சிறிசேனா.
அவர் பதவியேற்றதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வந்தார். நவம்பர் 14-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் கூட இருந்தது. முன்னதாக நாடாளுமன்றத்தை முடக்கி எதிர் முகாமில் இருக்கும் எம்.பிக்களை இழுக்கும் வேலையில் சிறிசேனாவும் ராஜபக்சேவும் இறங்கினார்கள். ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான பலம் ராஜபக்சேவுக்கு கிடைக்காததால், நேற்று நள்ளிரவு அதிரடியாக நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.
நாடாளுமன்றத்துக்கான பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் சிறிசேனாவின் இந்த முடிவு இலங்கை அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post