தபால் துறை பணியாளர்களின் அலட்சியத்தால் அரசு வேலைவாய்ப்பை இழந்ததாக பட்டதாரிப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை, பேரூர் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மனைவி சுமதி. 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், அன்னூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்குமாறு சுமதிக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் சுமதி வசிக்கும் பகுதிக்கு சம்பந்தப்பட்ட காளம்பாளையம் அஞ்சலகத்திற்கு 19ஆம் தேதி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் 10 நாட்களாக தபால் வழங்காமல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததாகவும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட தேதி முடிந்து அடுத்த நாள்தான் கடிதத்தை தன்னிடம் அளித்ததாக சுமதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து புகார் அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக கூறியுள்ள சுமதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post