வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மத்திய அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடைவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாருர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Discussion about this post