பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமும் பூம்புகார் ஆகும். இந்நகரம் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் என பலப்பெயர்களில் அழைக்கப்படுகிறது. கடற்கரைத் துறைமுகமாக விளங்கிய இந்நகரத்தின் வணிக முக்கியத்துவம் காரணமாக பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு குடிபெயர்ந்தார்கள். இந்நகரைப் பற்றி சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் அதிக அளவிலான தகவல் உள்ளது
.
பூம்புகாரை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் பல்துறை சார் ஆய்வு மேற்கொள்ள, 8 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் தலைமையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பூம்புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், காவிரி வண்டல் பகுதியில் இந்திய செயற்கைக்கோள் வாயிலாகவும், ஒலி கடல் தரைமட்ட அளவீடு வாயிலாகவும் ஆராயப்பட்டன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அதன் ஆய்வறிக்கையை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், காவிரி டெல்டா பகுதியில் உள்ள பூம்புகார் நகரம், சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் மிகப்பெரிய கப்பல் துறைமுகங்கள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் கலங்கரை விளக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள ஆய்வுத் தகவலின்படி, பூம்புகார் நகரமானது 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிற அறிய செய்தி கிடைத்துள்ளது. இதுவரை பூம்புகார் நகரமானது 2500 ஆண்டுகள் பழமையானது என்ற தகவலே நிலவி வந்த நிலையில் இத்தகவல் ஆச்சரியம் தரக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் பூம்புகார் ஆய்வுத் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளர் சோம. ராமசாமி, பூம்புகார் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிற அறியத் தகவலை அளித்துள்ளார். பூம்புகார் நகரம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அழிந்துபோனது. அது எவ்வாறு அழிந்தது என்பதற்கான தகவல் சரிவரயில்லை. கடல்கோள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. பூம்புகார் ஆய்வினைப் பொறுத்தவரை முதல் கட்டமாக ஜெப்கோ மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கடலுக்கு கீழே 40 கி.மீ தூரம் வரை 3 மிகப் பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கியிருப்பது தெரியவந்தது. தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ள சுமார் 1000 சதுர கிலோ மீட்டர்களில் எம்.பி.இ.எஸ் சர்வேயானது தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் வெளியானத் தகவலின் படி, கடற்கரையிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 100 மீட்டர் ஆழத்தில் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஒரு நகரம் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம்தான் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நகரத்தில் ஒரு துறைமுகமும் அதன் அருகே பல விதமான கட்டிடக் குடியிருப்புகளும் இருந்து உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நகரம் வடக்கு தெற்காக 11 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த துறைமுகத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 80 கப்பல்கள் நிறுத்துவதற்காக சுமார் 30 கி.மீ தூரத்திற்கு கப்பல் துறைகள் காணப்படுகின்றன. 3 முதல் 4 மீட்டர் உயரமான பீச் மணல் மேடுகள் மேற்காக அமைந்திருக்கின்றன. இது கப்பல் தளங்களை அலைகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள அமைக்கப்பட்டவையாக சொல்லப்படுகிறது. மேலும் துறைமுகத்திற்கு 10 கி.மீட்டர் வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பு எகிப்தில் உள்ள கிளியோப்பட்ரா கலங்கரை விளக்கம் போல உள்ளதாகவும், சோழ மன்னன் பராந்தக சோழன் கோடியக்கரையில் அமைத்த கலங்கரை விளக்கம் போலவும் காணப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துமே 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதால் உலகத்தின் மிகவும் பழமையான நகரங்களின் பட்டியலில் பூம்புகாரும் தற்போது இடம் பிடித்துள்ளது.
Discussion about this post