பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 24ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்களை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், மாதவரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
பொங்கலையொட்டி, வரும் 11ஆம் தேதி முதல் 14 வரை 4 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் சொந்த ஊர் செல்பவர்களுக்கு 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் கேகே நகர் பேருந்து பணிமனையில் இருந்தும் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, திருச்சி செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப 24ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது இலவச தொலைப்பேசி எண் (TollFree 1800 425 6151 )மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post