உழவர்களையும் உழவுக்கு உதவும் இயற்கை மற்றும் கால்நடைகளையும் போற்றும் வகையில் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடி மகிழ்ந்த வேளையில், தங்களின் வாழ்வாதாரத்துக்காக உதவும் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பூரிகுடிசை கிராம மக்கள்.பனைமரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வலியுறுத்தியும் பூரிகுடிசை கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பனை ஏறும் தொழிலாளர்கள், கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
பனைமரத்தினை அலங்கரித்து பூஜைகள் செய்து வழிபட்டு, அடுப்பில் பனை ஓலைகளால் நெருப்பு மூட்டி, மண்பானையில் பதநீரை ஊற்றி பொங்கல் வைத்து, அதனைப் படையலிட்டு இந்த கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அப்பொழுது பாரம்பரிய இசை அடித்தும், கும்மி அடித்தும், நடனமாடியும், விழாவில் பங்கேற்பவர்களுக்கு கள் பானம் மற்றும் பதநீர் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
கற்பக விருட்சமாய் திகழும் பனைமரங்களை தெய்வமாய் மதித்து விழா நடத்தும் மக்களின் கள் இறக்கும் கோரிக்கைக்கு இந்த அரசு செவிசாய்த்து பனைமரங்களை காக்க முன்வர வேண்டும்