தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் உள்ள தமிழர்களும் பொங்கல் திருநாளை உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
தை பிறந்தால்… வழி பிறக்கும்… என்பது தமிழர்களின் நம்பிக்கை. அதையொட்டி, தை முதல் நாள் பிறந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
வீடுகளின் முன்பு கோலமிட்டும், புதுப்பானைகளில் பொங்கல் வைத்தும் மக்கள் வழிபட்டனர். அறுவடைத் திருநாள் என்பதன் அடையாளமாக, அறுவடை முடிந்த நிலங்களில் விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல்… என்று உற்சாகக் கூச்சல் எழுப்பி பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பின்னர், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் சமைக்கப்பட்ட பொங்கலோடு, கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி சேர்த்து சூரியனுக்குப் படைத்தனர்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்பட தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் பொங்கல் திருநாள் இன்று உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
Discussion about this post