பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ள மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதிக்குள் கோவையில் உள்ள சிபிசிஐடி காவல்துறையிடம் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. மயூரா ஜெயக்குமாருடன் திருநாவுக்கரசுவுக்கு தொடர்பு இருந்ததாகவும் அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அவரை விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
பாலியல் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பது காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.