பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கி வரும், காவல்துறை ஆய்வாளர் செயலால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிபவர் ஜெயபால், மிகவும் பின் தங்கிய விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் வெள்ளகோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியருக்கு, சீருடைகள் வாங்கி தைத்து தருகிறார். இதுவரை தீத்தாம்பாளையம், உத்தமபாளையம், லக்ம நாயக்கன்பட்டி, DR நகர், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவியருக்கு சீருடை மற்றும் சாரணிய இயக்க சீருடைகளை தன் சொந்த செலவில் ஜெயபால் வழங்கியதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் முரட்டு குணம் பற்றியே அறிந்த பலருக்கு, இளகிய மனம் படைத்த ஜெயபால் போன்ற காவல் ஆய்வாளர்களின் செயல் பாராட்டைப்பெற்றுள்ளது.