சென்னையில், பார் மாஸ்டரை கொன்ற வடமாநில கொலையாளியை, செல்போன் சிக்னல் மூலம் ட்ராக் செய்து, 6 மணிநேரத்தில் தமிழக மற்றும் ஆந்திர காவல்துறையினர் கூட்டாக பிடித்து சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை உசிலம்பட்டியைச் சேர்ந்த வள்ளியப்பன் என்பவர், சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில், டாஸ்மாக்கடை பாரில் சமையல் மாஸ்டராக பணி செய்திருக்கிறார். அதே பாரில், அமீர்உசேன் என்பவர், துப்புரவு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், சாப்பாடு வைக்கவில்லை எனக்கூறி, அமீர் உசேன் வள்ளியப்பனை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த வள்ளியப்பன், அமீர் உசேனை தாக்கியுள்ளார். மறுநாள் அதிகாலை, தூங்கிக் கொண்டிருந்த வள்ளியப்பனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலைசெய்துவிட்டு, அமீர் உசேன் தப்பியோடியிருக்கிறார்.
இதையடுத்து, புகாரின் பேரில், காலையில் பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, அமீர் உசேனின் செல்போன் சிக்னல்களை ட்ராக் செய்தனர். சிக்னல் ஆந்திராவில் இருந்ததால், ஆந்திர போலீசாருக்கு தகவல் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, விஜயவாடா ரயில்நிலையத்தில், ஹவுரா செல்லும் கோரமண்டல் ரயிலிலிருந்த அமீர்உசேன் மற்றும் அவரது உறவினர் சதாம் உசேன் ஆகியோரை, மாலையில் போலீசார் கைது செய்தனர். சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீசார், அவர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Discussion about this post