5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் பெருமாள். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, 5 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பெருமாள் கைது செய்யப்பட்டு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
விசாரணைகள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை நீதிபதி இந்திராணி வழங்கினார். அதில், குற்றவாளி பெருமாளுக்கு ரூ.1,25,000 அபராதம் விதித்ததோடு, சாகும் வரை ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் பெருமாள் அடைக்கப்பட்டார். குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.