உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சட்டத் துறைஅமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த ஆட்சி 100 ஆண்டுகாலம் இருக்கும் என்பதை நனவாக்கி வருவதாக கூறினார்.
அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து கொண்டு இருப்பதாகவும், சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கலகத்தை உருவாக்கி நீதிமன்றம் மூலம் ஆட்சியை கலைக்க முயன்றது நடக்கவில்லை என்றும், தெரிவித்தார்.
மேலும், புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டிய விவகாரத்தில் விசாரணை கமிஷனை சந்திக்க மு.க.ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், நாங்கள் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஊழல் பற்றி பேச பா.ம.க.வினருக்கும் தகுதி இல்லை என்றும், அவர்கள் மீதும் குற்றச்சாட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி கொண்டு இருப்பதாகவும், இந்த ஆட்சி 100 ஆண்டு காலம் இருக்கும் என்றும், தொண்டர்களின் ரத்தத்தை நம்பி இந்த இயக்கம் செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும் கூறினார்.