நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு மிகக் கடுமையாக பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை நிறைவடைய இருந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். ஊரடங்கால் நாட்டு மக்கள் சந்தித்து வரும் சிரமங்களை நன்கு அறிந்துள்ளதாக கூறிய பிரதமர், நாட்டை பாதுகாப்பதற்காக மக்கள் மிகப்பெரிய சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக படை வீரர்கள் போல் இந்திய மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியமானது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் சார்பாக அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதாகவும், சவால்களை எதிர்கொள்ள அம்பேத்கரின் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பண்டிகைகளை கொண்டாடி வருவதாகவும், ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுவது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சமூக விலகல் முறை மிகப்பெரிய பலனை அளித்துள்ளது என்றும், கொரோனாவுக்கு எதிராக நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை சரியானது என்றும் கூறிய பிரதமர், இந்தியா பின்பற்றும் வழிமுறைகளை உலக நாடுகள் பாராட்டுவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் இதுவரை கடைபிடித்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும், எத்தகைய சூழ்நிலையிலும் கொரோனா வைரஸை நாம் கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். சிறிய அலட்சியம் ஏற்பட்டாலும், நாம் மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்றும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் 20ம் தேதி முதல் அனைத்து மட்டங்களிலும் கொரோனா நிலைமை குறித்து ஆராயப்படும் என கூறிய மோடி, ஏப்ரல் 20 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு மிகக் கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார். ஏழை மக்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 20 முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக சில கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்படும் என்றும், கட்டுப்பாடுகளை மீறினால் விலக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார். விலக்குகள் தொடர்பான விரிவான அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
Discussion about this post