பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் விவரம் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வரும் 21-ம் தேதி அமெரிக்காவிற்கு மேற்கொள்கிறார். மோடியின் பயண விவரம் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதன்படி, வரும் 21-ம் தேதி பிரதமர் அமெரிக்கா சென்றடைகிறார். 22ம் தேதி இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதனையடுத்து ஹூஸ்டன் மற்றும் நியூயார்க்கிற்கு பிரதமர் மோடி செல்கிறார். 24ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவில் மோடி கலந்து கொள்கிறார். விழாவில் சிங்கப்பூர், நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு கௌரவ விருது வழங்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு பிறகு, வரும் 27ம் தேதி மோடி முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முறையாக உரையாற்றுகிறார். அன்றைய தினமே அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து, அவர் நாடு திரும்புகிறார்.