பிரதமர் மோடியின் பெல்ஜியம் சுற்றுப்பயணம் ரத்து

பெல்ஜியம் நாட்டில் கொரோனா பாதிப்பு எதிரொலியால், அந்நாட்டில் சுற்றுப்பயணம்  மேற்கொள்ளவிருந்த மோடியின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில், வரும் 13 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான பிரசல்ஸில் அதன் தலைமையக பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தச்சூழலில் பிரதமரின் பயணம் பாதுகாப்பானது அல்ல என்பதால் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் ரவீஸ்குமார் தெரிவித்தார்.

Exit mobile version