சின்னப்புள்ளைங்க சின்னபுள்ளைங்க மாதிரி ஒழுங்கா இருக்கனும். சும்மா அடிச்சிக்க கூடாது. யார் என்ன சொன்ன என்ன ? நீங்க ஒன்னா வெளையாடனும் ஓக்கேவா? போங்க போய் முட்டாய் வாங்கி சாப்பிட்டுட்டு மறுபடியும் வெளாடப் போங்க என்கிற ஸ்டைலில் அம்மாவிடம் அறிவுரை வாங்கிய அனுபவமுண்டா?
ஐந்து வயதுப் பிள்ளைகளுக்கு அம்மா இப்படி சொல்லலாம். அதாவது சின்னபிள்ளைகளுக்கு பெரிய அம்மா இப்படி அறிவுரை சொல்வது நியாயம். ஆனால் பெரிய பிள்ளைகளுக்கு சின்ன அம்மா இப்படி சமரசம் செய்து வைப்பதெல்லாம் இன்றைய அரசியல் விளையாட்டில் ஆகப்பெரும் காமெடிகள்.
அமமுக அமைப்புசெயளாலரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி அண்மையில் திமுக பக்கம் ஒரு தாவு தாவியிருக்கிறார். இதையடுத்து தோற்கப்போகும் குழந்தை ஆட்டத்துக்கு முன் அழுவது போல, சிரித்துக்கொண்டே அழுதபடி கண்களில் கள்ளமழை சொரிந்துகொண்டிருந்த டிடிவி தினகரன் நேரடியாகவே அழும்படி சம்பவங்கள் அடுத்தடுத்து வந்தன.
செந்தில்பாலாஜிக்குப் பிறகு, பிரபுவும், தங்கத் தமிழ்ச்செல்வனும் டிடிவியை விட்டுப் போவதாக வெளிவந்த செய்தியை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் டிடிவியையும் தங்கதமிழ்செல்வனையும் அழைத்து சமரசம் பேசியிருக்கிறார் சசிகலா.
இதெல்லாம் பொய். நான் அமமுக விட்டுப் போகமாட்டேன் என்று இணையத்தில் இதயந்திறக்கிறார் தமிழ்செல்வன்.
இதற்கு முன் இதைவிட ஆவேசமாக எடப்பாடி பழனிசாமிக்கே சவால் விட்டுச் சூளுரைத்த செந்தில்குமார் (செந்தில்பாலாஜி – அது நியூமராலஜி) தான் சத்தமில்லாமல் திமுகவில் போய் சங்கமமானார்.
மீண்டும் அப்படி ஒரு இழப்பை விரும்பாத அமமுக ஏதாவது செய்தேனும் இவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டி இப்படியெல்லாம் குதியாட்டம் போட்டுக் குட்டிக்கரணம் பாய்கிறது.
இந்த நிலையில், இன்னும் 6 பேர் நிச்சயமாக அமமுக விலிருந்து வெளியேறுவார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான கோலாகல ஸ்ரீனிவாஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் உறுதியாகச் சொன்னது இங்கே குறிப்பிடத்தக்கது.
போகிற போக்கைப்பார்த்தால் டோக்கன் பாய்ஸ்க்கு டோக்கன் கொடுத்துத்தான் தினகரன் தக்க வைக்க வேண்டியிருக்கும் என்று சாமான்யர்கள் சத்தமில்லாமல் சிரிக்கிறார்கள்.
Discussion about this post