கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளாரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவரின் புகைப்படங்களை கேரள காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், புதன்கிழமை இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகள் தப்பி ஓடும் காட்சிகளை வைத்து வில்சனை சுட்டுக் கொன்ற நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டறிந்துள்ளனர். குற்றவாளிகள் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, 2 பேரின் புகைப்படங்களையும் கேரள மாநில காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கொலையான சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Discussion about this post