கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவியும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் தங்கள் சொத்துக்களை,  கடந்த 2015ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்தனர். அதில் கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6 கோடியே 38 லட்சம் ரூபாயும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1 கோடியே 35 லட்சம் ரூபாயும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என, அவர்கள் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்  இருந்து, தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவி ஸ்ரீநிதியும்  மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை  தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அன்றைய தினம்  இருவரும்  ஆஜராக தவறினால் அவர்களுக்கு  எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version